இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மட்டுமின்றி சில தனி நபர்களும் முயற்சி செய்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம்சாட்டி உள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற ராமினெனி அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “கொரோனா மற்றும் அதன் புதிய வகை திரிபுகளைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசியான கோவாக்சினை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியான கோவாக்ஸின், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றன. ஃபைசர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து பல தனி நபர்கள் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துவிடக் கூடாது என்பதற்காக எண்ணற்ற முயற்சிகள் மேற்கொண்டனர்.
இதற்காக கோவாக்சினின் திறமையை குறைத்தும், அது சக்தி குறைந்தது என்று பொய் பிரசாரம் செய்து அதன் சிறப்பை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம் புகார் அளித்து, கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசி மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாரத் பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி சுசித்ரா ஆகியோர் இந்நிறுவனத்தை உருவாக்குவதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். இந்நிறுவனம் இன்று இந்த அளவுக்கு உருவானதில் இவர்களது பங்களிப்பு மிகவும் அதிகம்.
இன்று அவர்கள் நாட்டுக்குப் புகழைத் தேடித் தந்திருக்கிறார்கள். நமது நாட்டுக்குப் பெயரும், புகழும் கொண்டு சேர்த்திருக்கும் நம் மாநில நிறுவனத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்க அனைத்து மக்களும் முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அறக்கட்டளை சார்பில் பாரத் பயோடெக் நிறுவனர்களான கிருஷ்ணா, சுசித்ரா ஆகியோருக்கு விருதுகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வழங்கி கவுரவித்தார்.