முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து இனி அபராதம் விதிக்கப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, முதல் தவணை தடுப்பூசியை 92% பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75% பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50க்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் கொரோனா காலத்தில், பொது சுகாதார சட்டத்தின்படி தமிழ்நாடு அரசு விதித்திருந்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதிசெய்யுமாறு வெளியிடப்பட்ட உத்தரவை திரும்ப பெறுவதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதே சமயம் அரசின் நிலையான வழிகாட்டுதல்களான தனி மனித இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுய விருப்பத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிராவிற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் இனி முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று (5.4.2022) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டாலும், முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றிக் கொள்ளலாம்.

மேலும் தடுப்பூசி கட்டாயமில்லை என்று கூறப்பட்டுள்ளதே தவிர, யாரும் போடக்கூடாது என்று கூறப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை. எனவே முகக் கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று (5.4.2022) சென்னை மெரினாவில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, கொரோனா காலக் கட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் செவிலியர்கள் உரிய அனுமதி பெற்று போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் குறித்து பேசிய சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், “கடந்த 2 வருடமாக கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் இருந்து ஒவ்வொருவரும் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும்.

எனவே கொரோனாவை பொறுத்தவரை அரசின் விதிமுறைகள் இருந்தால்தான் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று நினைக்க கூடாது. ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்துக்காக, சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய கொரோனா பிஏ.-1, பிஏ.-2 ஆகிய இரண்டும் சேர்ந்து ஒமைக்ரான் எக்சி என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க கண்காணித்து வருகிறோம். சீனாவின் ஷாங்காய் நகரில் உருமாறிய பிஏ.2 ஒமைக்ரான் பரவி வருவதாக தகவல் வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் ஒமைக்ரான் பி.1 வைரஸ்தான் அதிகம் பரவியது. அதுவும் இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர் சிகிச்சையில் உள்ளனர். உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

எனவே உருமாறிய கொரோனா எந்த வகையில் வந்தாலும் நாம் அதை எதிர்கொள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் தான் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ முடியும். பொருளாதார ரீதியாக யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.