பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் புதிய வாழ்க்கையை தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் மற்றும் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருவொற்றியூரில் உள்ள அரிவாங்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசைமாற்றுவாரியக் குடியிருப்பில் டி பிளாக்கில் 26.12.2021 முதலே விரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று (27.12.2021) காலை விரிசல் அதிகரிக்கவே அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறினர். குடியிருப்பில் இருந்த 24 குடும்பத்தினரும் வெளியேறிய நிலையில் காலையில் மொத்த கட்டிடமும் சடசடவென இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகள் அனைத்தும் இடிந்து மண்மேடாக காட்சியளித்தது.

தகவலறிந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் இருந்த குடும்பத்தினர் முன்கூடியே வெளியேறியதால் அனைவரும் உயிரோடு தப்பியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

நீர் நிலைகளில் கட்டிடம் கட்டியதால் விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் வசித்தவர்கள் தெரிவித்தனர். மேலும் டி பிளாக் மட்டுமே இப்போது இடிந்து விழுந்தாலும் சி பிளாக்கில் வசிப்பவர்களும் மற்ற குடியிருப்புகளும் உடைந்து வழும் வகையில்தான் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் அச்சமடைந்துள்ளனர். 23 ஆண்டுகளுக்குள் கட்டிடம் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் தா.மோ.அன்பரசனை அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்கள், மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.