சானிடைசரில் ஆல்கஹால் கலந்து இருப்பதால் கோயில்களை திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களை இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதித்தது. இதனடிப்படையில் பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு உள்ள தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. ஆனால் ஹோட்டல்கள், மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்திலும் கோயில்கள் இன்று திறக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காலையில் வழிபாடு செய்தார். கோயில்களில் முக கவசம் அணிந்தும் சமூக விலகலை கடைபிடித்தும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் புகழ்பெற்ற மதுரா கிருஷ்ணர் கோயில் இன்று திறக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, அரசு வழிகாட்டு நெறிமுறையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சானிடைசரால் கைகளை கழுவ வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் சானிடைசர், ஆல்கஹாலில் தயாரிக்கப்படுகிறது.
ஆல்கஹாலை பயன்படுத்திவிட்டு கோயிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெடும். ஆகையால் நாங்கள் கோவிலை திறக்கவில்லை என்கின்றனர் பிருந்தாவன், மதுரா கோவில் நிர்வாகத்தினர். முன்னதாக இந்த கோயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதுமான அளவு போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
மதுராவின் பிற பகுதிகளில் கோயில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மதுரா கிருஷ்ணர் கோவில் வரும் 15-ந் தேதிக்குப் பின்னரே திறக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க: கோயிலில் நுழைந்ததற்காக 17 வயது தலித் இளைஞர் சுட்டுக் கொலை; உ.பி.யில் நிகழ்ந்த அவலம்
Trackbacks/Pingbacks