கொரோனாவின் பிடியில் இந்திய தலைநகர் டெல்லியும், தமிழக தலைநகர் சென்னையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த இரு வாரங்களில் 122 படைவீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் CRPF பட்டாலியன் படை கொரோனா பரவல் மையமாக மாறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 71 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 39வது நாளாக அமலில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இதுவரை 3,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்கு டெல்லியில் மயூர் விகார் நிலை 3-இல் துணை ராணுவ படையின் (CRPF) 31 ஆவது பட்டாலியன் படை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இன்று கிழக்கு டெல்லியின் மயூர் விஹார் முகாமில் தங்கியிருந்த சிஆர்பிஎஃபின் ஒரே பட்டாலியனைச் சேர்ந்த 68 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களில் ஏற்கனவே 54 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக 122 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் குணமடைந்துள்ளார் மற்றும் 55 வயது படைவீரர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மேலும் வாசிக்க: மருத்துவமனைகள் மீது மலர் தூவி, முப்படைகள் அணிவகுப்பு நடத்தி கவுரவிக்கும்- இராணுவ தளபதி பிபின் ராவத்
இவர்களுக்கு CRPF படையில் செவிலிய உதவியாளர் பிரிவில் பணியாற்றி வந்த ஒருவரிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அந்த நபருக்கு கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கொரோனா அறிகுறிகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொரோனா உறுதியானது
இதுகுறித்து கவனத்தில் கொண்ட உள்துறை அமைச்சகம் நோய் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்து விளக்கமளிக்குமாறு சிஆர்பிஎஃப் படையின் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 37 ஆயிரமாக உயர்ந்துள்ளது.