பாஜக ஆளும் குஜராத் மாநிலம், அகமதாபாத் சிவில் மருத்துவமனை இந்து மற்றும் முஸ்லீம் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டுகளை உருவாக்கியுள்ளதாகவும், குஜராத் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இது செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் குன்வந்த் ரத்தோட் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மோசமான நிலையில் உள்ளது குஜராத். இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை காட்டிலும், இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இன்று வரை மொத்த பலி எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதார முதன்மைச் செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இந்து மற்றும் முஸ்லீம் நோயாளிகளுக்கு தனித்தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரத்தோட் கூறுகையில், ”பொதுவாக, ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கு தனி வார்டுகள் உள்ளன, ஆனால் இங்கே, இந்து மற்றும் முஸ்லீம் நோயாளிகளுக்கு தனி வார்டுகளை உருவாக்கியுள்ளோம். மேலும் இந்த பிரிவினைக்கான முடிவு அரசுடையது” என்றார்.
ஆங்கில நாளிதழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், அகமதாபாத் மருத்துவமனையில், மொத்தம் 1,200 படுக்கைகள், கொரோனா பாதித்த நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஏ-4 வார்டிலிருந்து, சி-4 வார்டுக்கு ஒரே மதப் பிரிவை சேர்ந்த 28 நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குன்வந்த் எச் ரத்தோட்டிடம் கேட்டபோது, இந்த பிரிவினை மாநில அரசின் முடிவின்படி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும், துணை முதலமைச்சரும் சுகாதார அமைச்சருமான நிதின் படேல் இதனை மறுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதாக உறுதியளித்திருந்தாலும், ஒரு சிவில் மருத்துவமனையில் இத்தகைய வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற உண்மை “பாஜக மாநில அரசின் கீழ் ஆளுகை நிலை குறித்து பேசுகிறது” என்கிறது செய்தி குறிப்பு.
இதுகுறித்து, முற்போக்கு மருத்துவ மற்றும் விஞ்ஞானிகள் மன்றம் (PMSF), அரசு சாரா மருத்துவர்கள் அமைப்பு கூறுகையில், அரசாங்க மருத்துவமனைகளில் இதுபோன்று மதத்தின் அடிப்படையில் நோயாளிகளுக்கு இடையில் வேறுபடுத்துவது போன்ற செயல்கள் மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
மேலும் அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தங்கள் மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு வார்டுகளை உருவாக்கியதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும், அவரது துணை மற்றும் மாநில சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்து, இந்த செயலைச் செய்ய சதி செய்த மற்றவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்கவும், PMSF கோரியுள்ளது.
மேலும், மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்கள், இதுபோன்ற அரசாங்கத்தின் சதித்திட்டங்களுக்கும் வகுப்புவாத பிரிவினைக்கும் சாந்தமாக அடிபணிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது PMSF.