கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஒழுங்கு நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகும் பிரதமர் மோடியின் புகைப்படம் அரசு சார்ந்த திட்டங்களில் இடம்பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க தேர்தல் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட சுகாதாரத் துறையினர் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கும் சான்றிதழில் தேர்தல் முடியும்வரை மோடியின் புகைப்படத்தை நீக்குவதாக கூறியது.
இதனையடுத்து கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்கத் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இதேபோல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய விளம்பர பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்தையும் அகற்றத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலியல் புகார்: எங்கள் வீடியோக்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாதென பாஜக அமைச்சர்கள் மனு