நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 10,451,346 பேர் பாதிக்கப்பட்டு, 151,048 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் வரும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக, ஆண்டு தோறும் ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.