கொரோனா தடுப்பு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாப்பேட்டை அருகில் உள்ள நெருஞ்சி பேட்டையை சேர்ந்தவர் பாலன். இவர் கடந்த 13 ஆண்டுகளாக நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
மேலும் வாசிக்க: கொரோனா நேரத்திலும் துய்மைப் பணியாளர்கள் போராட்டம் சரியானதா..
நேற்று (மே.7) வியாழன் காலை நெருஞ்சிப்பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவில், கொரோனா தடுப்பு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக பணியாளர்கள் பேரூராட்சியின் குப்பை வண்டியில் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உள்ள பணியாளர்கள் பாலனை பரிசோதித்ததில், ஏற்கனவே பாலன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சக தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலன் தற்காலிக பணி நியமனம் அடிப்படையில் வேலை செய்வதால், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.