பிளாஸ்மா சிகிச்சை உட்பட கொரோனாவிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியாவில் 29451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா போன்ற நாடுகளில் போதிய சோதனைகள் நடத்தப்படாததால் இந்த எண்ணிக்கை உறுதியானவையல்ல என்பதை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரகுயின் மருந்துகளை பயன்படுத்தி பலனளிக்கவில்லை எனக் கூறியிருந்தது. இன்னும் சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக எதிர்ப்பு சக்தி மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா தெரபி பயன்படுத்தப்பட்டு, பெரிய அளவில் பலன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: சீனாவிற்கே திரும்ப அனுப்பப்படும் ரேபிட் டெஸ்ட் கருவிகள்- கொரோனா தோல்விகள்

கேரளா, டெல்லி, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளது. தமிழகமும் இந்த சிகிச்சைக்காக அனுமதி கேட்டு காத்துள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே பிளாஸ்மா சிகிச்சையை தொடக்கி, பெரிய அளவில் நல்ல பலன் கொடுக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிளாஸ்மா சிகிச்சை என்பது தற்போது சோதனை கட்டத்தில் மட்டுமே இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சை முறை கொரோனாவிற்கு எதிராக பலன் அளிக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. எங்களிடம் அனுமதி பெறாமல் பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டால் அது குற்றம். பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது ஆய்வுக்காக மட்டுமே சிகிச்சையாக இதை வழங்க முடியாது” என கூறியுள்ளது.

மேலும் பிளாஸ்மா தெரபியை முறையின்றி பயன்படுத்தினால், அது உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூட வாய்ப்புள்ளது. இதனால் கவனமாக இருக்க வேண்டும், என்றும் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.