ஜூன் 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

இருப்பினும், சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழு மற்றும் அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையில்,

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், 19.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

இருப்பினும் குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள்; மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி.

வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.

ரேஷன் கடைகள், மளிகை, காய்கறி, பெட்ரோல் நிலையங்கள் காலை 6 முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்.

வீட்டிலிருந்து 2 கி.மீ சுற்றளவு உள்ள பகுதிகளில் மட்டுமே மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டும். வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்துதான் செல்ல வேண்டும்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் திறக்க அனுமதியில்லை. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும்.

சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் 33% பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.