கொடநாடு கணினிப் பொறியாளர் தினேஷ் குமார் தற்கொலை வழக்கை, தற்போது சந்தேக மரணம் என தனிப்படை காவல்துறை வழக்குப்பதிவு செய்ததுடன், வழக்கை மீண்டும் மறு விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அந்த வழக்கை நீலகிரி காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாள்தோறும் அரசு தரப்பு சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டோரிடம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தப்படுகிறது.
முக்கிய குற்றவாளியான சயான், சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என 40க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தி அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளிகள் கனகராஜ் ஆத்தூரில் நடைபெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், 2வது குற்றவாளி சாயன் தனது மனைவி குழந்தையுடன் கோவையில் இருந்து பாலக்காடு சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சாயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் .சாயன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி பொறியாளர் தினேஷ் கொலை கொள்ளை சம்பவம் நடந்த 2 மாதங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கை விசாரித்த சோலூர் வட்டம் காவல்துறையினர், கண்பார்வை மங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து வழக்கை முடித்தனர்.
இந்நிலையில் கொடநாடு வழக்கு மறுவிசாரணை நடைபெறுவதால் தினேஷ்குமார் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து தினேஷ்குமார் வழக்கையும் மீண்டும் விசாரிக்க தனிப்படை காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி கோத்தகிரி தாசில்தாரை சந்தித்த தனிப்படை காவல்துறையினர், தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தினேஷ் மரணம் குறித்து மறு விசாரணையை தொடங்கி உள்ளனர். தினேஷின் தந்தை போஜன் மற்றும் தினேஷின் சகோதரி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தினேஷ்குமார் எப்படி இறந்தார், அவரது மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் உள்ளன, நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், பல முக்கிய தகவல்களை போஜன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த தகவல்களை காவல்துறையினர் வாக்குமூலமாக பதிவு செய்தனர். போஜனை தொடர்ந்து அவரது உறவினர்கள் சிலரிடமும், அவருடன் பணியாற்றிய எஸ்டேட் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
மேலும் தினேஷ்குமாரின் தற்கொலை வழக்கை, சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தேவைப்பட்டால் தினேஷ்குமாரின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கொடநாடு வழக்கில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்கள் வெளியாகி வருவதால் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி