கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் சொகுசு பங்களா உள்ளது.
 
இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்., 24ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார்.
 
அந்த ஆவணப்படத்தில் மனோஜ், சயான் ஆகியோர் முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர்.
 
இதுதொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 
இந்த வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் கொடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயான் ஆகியோர் ஜாமீன் பெற்றனர்.
 
எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் நேரத்தை கருத்தில் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதாலும், சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதாலும் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உதகை நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து பிப்., 8ம் தேதி சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீனையும் ரத்து செய்தும், அவர்களை கைது செய்யவும் உதகை நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த உத்தரவையடுத்து அவர்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பதுங்கியிருந்த சயான், மனோஜை தமிழக போலீசார் கைது செய்துள்ளதாக காவல்துறை செய்தி குறிப்பு கூறுகிறது
 
இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்த உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சயன், மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
ஆனால் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.