10,11,12ம் வகுப்பு பொதுதேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. இதையடுத்து 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று துவங்கியது.
 
இந்த நிலையில், தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற கூடாது என்பதில் தேர்வுத்துறை உறுதியாக உள்ளது. அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் மாணவர்கள் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது காப்பி அடித்தாலோ அதற்கு சம்பந்தப்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.
 
அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் அந்த அறையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
பொதுத்தேர்வின் போது, 4000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
 
அதன்படி இனி நடைபெற உள்ள தேர்வுகளில் பறக்கும் படை கண்காணிப்பின் போது, தேர்வு அறையில் மாணவர் காப்பி அடிப்பதை கண்டுபிடித்தால் சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்ப தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
 
அவ்வாறு அனுப்பப்படும் நோட்டீசுக்கு 3 நாட்களுக்குள்ளாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களாக இருந்தால், அந்த ஆசிரியர் பணிபுரியும் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவரை தேர்வு பணியில் இருந்து விளக்கி வைப்பது போன்ற அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவுகளை நேற்று மாலை 32 மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
 
மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்று ஆசிரியர்கள் மீது நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் திருச்சி, வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, அந்த மாணவர்கள் தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர்கள் 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
தேர்வுத்துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.