பிரபல அட்லஸ் சைக்கிள் நிறுவனம் தனது கடைசி தொழிற்சாலையையும் நிதி நெருக்கடி காரணமாக மூடியுள்ளது
இந்தியாவில் இயங்கி வந்த பிரபல சைக்கிள் நிறுவனங்களில் அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவனமும் ஒன்று. சுமார் 70 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனம், ஹரியாணாவின் சோனிபேட் என்ற இடத்தில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.
80, 90ஸ் கிட்ஸ் காலங்களில் மிகவும் பிரபலமான அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை 2000ஆவது ஆண்டு வரை அமோகமாகவே இருந்தது. அதன்பிறகு, இரு சக்கர வாகனங்களின் வரத்து அதிகமானதால், சைக்கிள்களை வாங்கும் வழக்கம் குறைந்து போனது. இதனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள், சிறுவர்கள் மட்டுமே சைக்கிள்களை வாங்கி வருகின்றனர்.
இதையடுத்து, விற்பனை குறைவு, நிதிச்சுமை உள்ளிட்டவைகள் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலம் மலன்பூரில் உள்ள தொழிற்சாலையையும், 2018ஆம் ஆண்டு சோனிபேட்டில் உள்ள தொழிற்சாலையையும் அட்லஸ் நிறுவனம் மூடியது.
மேலும் வாசிக்க: கொரோனா எதிரொலி; அடுத்தடுத்து மூடப்பட்ட ஒப்போ, நோக்கியா
அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநிலம் ஷாகிபாபாத்தில் இயங்கி வந்த கடைசி தொழிற்சாலையையும் அட்லஸ் நிறுவனம் மூடியுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக இப்போது உள்ள சூழலில் நிறுவனத்தை நடத்துவது சாத்தியமில்லை என அறிவித்துள்ளது.
முன்னறிவிப்பின்றி திடீரென அட்லஸ் தொழிற்சாலை மூடப்பட்டதால் ஏரளமான தொழிலாளர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர். கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Trackbacks/Pingbacks