கொரோனாவை பரவலை கட்டுப்படுத்த அரசு, தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கார்டு கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 25,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 18,000த்தை தாண்டியுள்ளது. இன்று மட்டும் 1,012 பேர் கொரோனாவால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் செயல்பட்டு வரும் 10 அரசு ஆய்வகங்கள், 13 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்படும் முடிவுகள் முழுமையாக இல்லை. எனவே, கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை தடமறிவது கடினமாக உள்ளது. இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவும் முடியாமல் போகிறது.

மேலும் வாசிக்க: அழகு நிலையங்களுக்கு செல்ல ஆதார் அவசியம்-தமிழக அரசு

எனவே, இந்த இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு, தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களின் வீட்டு எண், முகவரி, பின்கோடு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டு கண்காணிப்பில் வைக்கும் முறையை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் முகாமில் தங்கவைக்கப்படுவார்கள்” என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: மத்திய அரசை பாராட்டிய ரஜினி, விமர்சித்த பாமக ராமதாஸ்