நித்யானந்தா தான் உருவாக்கிய தனிநாடு எனக் கூறும் கைலாசாவின் நாணயங்களை விநாயகர் சதுர்த்தியான இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்த நித்யானந்தா, பாலியல் புகார்களில் பலமுறை சிக்கியுள்ளார். நித்யானந்தா மீதான பாலியல் வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளது.
பாலியல் வல்லுறவு, கடத்தல், ஆபாசம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தவிர, தனது கருத்துகளால் பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ள நித்யானந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தலைமறைவாக உள்ளார். மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைகளுக்கு 50க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்துக்கு வராமல் இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில், இந்துக்களுக்கு என்று ‘கைலாசா’ எனும் தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்ட நித்தியானந்தா, கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம், தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு என்றும் அறிவித்தார்.
யூட்யூப் சேனலில் வீடியோகள் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். திடீரென கடந்த வாரம் கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் அறிவிக்கப் போவதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி விநாயகர் சதுர்த்தியான இன்று (ஆகஸ்ட் 22) கைலாசா நாட்டிற்கான புதிய தங்கக் காசுகளை அறிமுகம் செய்துள்ளார்.
ஒரு கைலாசியன் டாலர் சுமார் 11.66 கிராம் தங்கத்தால் ஆனது எனக் கூறப்படுகிறது. பழைய கால இந்திய நாணயங்களைப் போல காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை வெளியிட்டு, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக்கு என ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ள நித்யானந்தா, 300 பக்கம் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார் விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க: முதல்வர் யோகியின் ராம ராஜ்ஜியத்தில் தொடரும் பாலியல் வன்முறைகள்..