ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் தங்கள் அரசு உறுதியாக உள்ளது என்று கூறும் முதல்வர் யோகியின் மாநிலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி வலுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லஷ்மிப்பூர் கேரி என்ற பகுதியில் 13 வயசு குழந்தையின் உடல் ஆகஸ்ட் 16-ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்துக்குள் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த குழந்தையை ஒரு வெறிபிடித்த கும்பல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இச்சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

ஆகஸ்ட் 6-ம்தேதி ஹாப்பூர் என்ற பகுதியில் விளையாடி கொண்டிருந்த 6 வயது பெண் குழந்தையை கடத்தி சென்று, பலாத்காரம் செய்து, ஒரு புதருக்குள் தூக்கி வீசி சென்றுள்ளனர். அக்குழந்தை மோசமான ரத்தக் காயங்களுடன் மீரட்டில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்.

ஆகஸ்ட் 5ந் தேதி புலந்தசகர் மாவட்டத்திலுள்ள குர்ஜா எனும் பகுதியில் 8 வயசு சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி நடந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை கத்தி கூச்சலிடவும், குழந்தையின் குரல் வளையை நெரித்தே கொன்று, குழந்தையின் உடலை கரும்பு தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த அதே ஆகஸ்ட் 5-ம் தேதி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ஒட்டுமொத்த மீடியாவும், ராமர் கோயில் பூமி பூஜை குறித்த செய்தியில் ஆர்வம் காட்டி கொண்டிருந்த நேரத்தில், ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட அவலமும் அரங்கேறியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய யோகி, உத்தரபிரதேசத்தில் தான் பதவி ஏற்றப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இனி வரப்போகும் நாட்களிலும் சிறப்பாக இருக்கும் என்று பெருமிதம் கொண்டார்.

இந்த நாட்டில் ராம ராஜ்ஜியம் தான் இருக்கவேண்டும். ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று யோகி கூறினாலும், நாட்டில் குறிப்பாக உ.பி. மாநிலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த 2017ல் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஆன்ட்டி-ரோமியோ ஸ்குவாட் அமைக்கப்படும். குழந்தைகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை எதுவும் நடக்காமல் இருக்க இந்த குழு உறுதி செய்யும் என்று கூறினார். ஆனால் அக்குழுவின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: பாஜகவுக்கு ஆதரவாக உள்ள இந்திய பேஸ்புக் நிறுவனம்… சி.இ.ஓ. மார்க்கிற்கு காங்கிரஸ் கடிதம்