பாகிஸ்தான் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பொறுப்பேற்ற பின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்கமுடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது. மேலும் தீவிரவாதக்குழுக்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. எல்லை மீறி இந்தியாவில் தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
 
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி இங்கிலாந்தில் ’மாணவர்கள் நாடாளுமன்றத்தில்’ பேசுகையில்,
‘நான் சொல்கிறேன், பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, இந்தியாவுக்கும் காஷ்மீரைக் கொடுக்க வேண்டாம். காஷ்மீர் மாநிலத்தைச் சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அவ்வாறு சுதந்திரமாகச் செயல்பட்டால் குறைந்தபட்சம் மனிதநேயம் உயிருடன் இருக்கும். மக்கள் உயிரிழப்புகளைச் சந்திக்காமல் இருப்பார்கள்.
 
4 மாநிலங்களைக் கூட நிர்வகிக்க முடியாத பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம். அங்கு மிகப்பெரிய பிரச்சினையே மனிதநேயம்தான்.
 
மக்கள் நாள்தோறும் உயிரிழந்து வருவது வேதனையாக இருக்கிறது. எந்த மதத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனையானது” என பேசினார்
 
இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி இன்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் நான் லண்டனில் பேசிய பேச்சை இந்திய ஊடகங்கள் தவறுதலாக திரித்து வெளியிட்டுள்ளன என்று குற்றம் சாட்டி உள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”காஷ்மீர் குறித்து நான் கூறிய கருத்துகளை இந்திய ஊடகங்கள் தவறுதலாக, திரித்து வெளியிட்டுள்ளன. என்னுடைய நாட்டின் மீது மிகுந்த பற்றும், அபிமானமும் கொண்டவன். மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதேசமயம், போராடி வரும் காஷ்மீர் மக்களின் போராட்டத்தையும் நான் மதிக்கிறேன். அனைத்து இடங்களிலும் மனிதநேயம் காக்கப்பட வேண்டும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
 
நான் பேசிய பேச்சின் முழுமையான வீடியோ விவரங்கள் வெளியாகவில்லை, தேவையானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளனர். நான் பேசியதாகக் கூறப்படும் காட்சிக்கு முன் என்ன பேசினேன் என்பது அதில் இல்லை. என்னைப் பொறுத்தவரை காஷ்மீர் தீர்க்கப்படாத பிரச்சினைக்குரிய பகுதியாகும்.
 
காஷ்மீரை இந்தியா காட்டுமிராண்டித்தனமாக ஆக்கிரமித்துள்ளது. ஐ.நா. சபை தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினை கண்டிப்பாகத் தீர்க்கப்பட வேண்டும். காஷ்மீர் விடுதலைக்காக நான் மட்டுமல்ல ஒவ்வொரு பாகிஸ்தானியரும் ஆதரவு அளிப்பார்கள். காஷ்மீர் எப்போதும் பாகிஸ்தானைச் சேர்ந்ததுதான்” என்று சாகித் அப்ரிடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.