திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் நவகிரகங்களில் குரு பகவான் தலமான ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதை குருப்பெயர்ச்சி என்கிறார்கள் .
இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இன்று (4ம்தேதி) இரவு 10.05க்கு பெயர்ச்சியடைகிறார். குருப்பெயர்ச்சிக்கு முன்னதாக முதல் கட்ட லட்சார்ச்சனை கடந்த மாதம் 27ல் துவங்கி, அக். 1ம் தேதி வரை நடைபெற்றது. 2வது கட்ட லட்சார்ச்சனை குருப்பெயர்ச்சிக்குப் பின் வரும் 8 முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி கோயிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு குருபரிஹார ஹோமத்துடன் குருப்பெயர்ச்சி விழா துவங்கியது. கலங்காமற் காத்த விநாயகர், ஏலவார் குழலி அம்மன், சனிபகவான், ஆபத் சகாயேஸ்வரர், வள்ளி, தெய்வானை சதேம சுப்பிரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
குருபகவானுக்கு தங்க கசவம் அணிவிக்கப்பட்டது. குரு பகவான் உள்ளிட்ட சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.இன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தஞ்சை அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலிலும் இன்று குருபெயர்ச்சி விழா நடக்கிறது. மழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து தரிசனம் செய்து வருகிறார்கள். கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களின் வரிசையில் 22வது சுயம்பு தலமாக திட்டை விளங்குகிறது.
குரு பெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வரும் 10ம் தேதி ஏகதின லட்ச்சார்ச்சனை நடக்கிறது இதற்கு ரூ.300 கட்டணம் என தெரிவிக்கபட்டுள்ளது ..
மேலும் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை 4 நாட்கள் பரிகார ஹோமங்கள் நடக்கிறது. இந்த ஹோமங்களில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.500 ஆகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது