பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்ரியோனா க்ரே 2018 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
2018ஆம் ஆண்டுக்கான 67ஆவது பிரபஞ்ச அழகிப்போட்டி, தாய்லாந்தில் உள்ள நான்தாபுரி மாநிலத்தில் உள்ள முவாங்தாங் எனும் நகரில் நடைபெற்றது.
 
94 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில், இன்று (டிசம்பர் 17) நடைபெற்ற இறுதிப் போட்டியில், பிலிப்பைன்ஸ் அழகி கட்ரியோனா க்ரே, தென்னாப்ரிக்க அழகி டாமரின் க்ரீன் மற்றும் வெனிசுலாவின் ஸ்டெஃபனி குட்டரஸ் ஆகிய மூவரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிப் போட்டியிட்டனர்.
 
இதில், முதலில் மூன்றாவது இடத்துக்கான அழகியைத் தொகுப்பாளர் அறிவித்தார். வெனிசுலாவின் ஸ்டெஃபனி குட்டரஸ் மூன்றாவது அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 
இறுதியாக, பிலிப்பைன்ஸை சேர்ந்த கட்ரியோனா க்ரே பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டார். வெற்றி பெற்ற கட்ரியோனா க்ரேவுக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மகுடம் சூட்டினார். இரண்டாம் இடத்திற்கு தென்னாப்ரிக்காவின் டாமரின் க்ரீன் தேர்வானார்.
 
பிரபஞ்ச அழகி 2018ம் ஆண்டு அழகி போட்டியில், 22வயதான இந்திய அழகி நேஹல் சுதாசமா இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டார். ஆனால், டாப் 20 பட்டியலில் கூட அவர் இடம்பெறவில்லை.