கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு ஆன்மீக அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.

சபரிமலை கோவிலுக்கு செல்ல அடுத்த மாதம் 16-ம் தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று கேரளா அரசு மற்றும் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்வது குறித்து கேரள அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டது, இனி சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுக்கவும் முடியாது என அவர் தெரிவித்தார்.

தேவசம் போர்டு மற்றும் மாநில அரசு இருவரும் தான் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும் இது நடைபெறாத என்ற தெரிந்ததும் ஆர்எஸ்எஸ் புலம்ப தொடங்கியுள்ளது

சபரிமலை தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் கேரளா உணர்வுகளை புறக்கணித்துவிட்டது என ஆர்.எஸ்.எஸ். விமர்சனம் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கருத்தில் எடுக்கும்போது பக்தர்களின் உணர்வுகளை புறக்கணிக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்ப்பை ஆய்வு செய்து, சட்டப்படி உள்ள மற்ற வழிமுறைகள் குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. தங்களின் பக்திக்கு எந்த வழிபாட்டு முறை சிறந்தது என்பதையும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.

இவ்விவகாரத்தில் நிலையை ஆய்வு செய்யவும், சட்டப்பூர்வமாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக ஆன்மீக மற்றும் சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நந்தன்கோட்டில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் சபரிமலை கோவிலுக்கு செல்ல அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி முதல் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதனால் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடவுளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.