லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் முதன்மை குற்றவாளி ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா தான் எனக் குற்றம்சாட்டி, இதுதொடர்பாக 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 1 ஆண்டுக்கும் மேலான போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் பாஜக அமைச்சர்களுக்கு எதிராக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது ஏறி 4 விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்தின் போது 4 பேரும், மேலும் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்டதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடையதாக ஒன்றிய பாஜக அமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து விசாரித்துவந்த சிறப்பு விசாரணைக்குழு, லக்கிம்பூர் படுகொலை திட்டமிட்ட சதி என்று தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து பாஜகவின் அஜய் மிஸ்ரா, ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் லக்கிம்பூர் படுகொலை வழக்கில் காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில் லக்கிம்பூரில் மொத்தம் 8 பேர் கொலல்ப்பட்ட சம்பவத்தில் முதன்மை குற்றவாளி ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராதான்; அவர்தான் சம்பவ இடத்தில் இருந்து வன்முறைகளை நிகழ்த்தினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.