ஏற்காடு மலைப்பாதையில் பற்றி எரியும் தீ 99.9 சதவீதம் அணைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதால் ஏற்காட்டிற்கு செல்லும் பாதை இன்று திறக்கப்படுமா என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
சேலம் ஏற்காடு மலையில் கடந்த 22ம் தேதி முதல் தொடர்ந்து 5வது நாட்களாக காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. இதில் 60 ஹெக்டேர் அளவுக்கு செடி, கொடி, மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
 
இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறை, தீயணைப்பு மற்றும் கிராம குழுவை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த காட்டுத்தீயின் காரணமாக பெருமளவு புகை சூழ்ந்துள்ளது.
 
இதையடுத்து ஏற்காட்டிற்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. இதனால் ஏற்காடு செல்லும் மக்கள், சுற்றுலாப்பணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாற்றுப்பாதையான குப்பனூர் வழியாக ஏற்காடு சென்று வருகின்றனர்.
 
அதே நேரத்தில் ஏற்காட்டில் பரவியுள்ள தீ முற்றிலும் அணைக்கப்படவில்லை. நேற்று இரவில் கூட தீ பிடித்து எரிந்தது. ஆங்காங்கே புகை கிளம்பி வருகிறது. ஆனால் மாவட்ட வனஅதிகாரி பெரியசாமி, கலெக்டர் ரோகிணிக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். ‘காட்டுத்தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்காட்டிற்கு செல்லும் பாதையை திறந்து விடலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்ைக எடுப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். முழு அளவில் தீ அணைக்கப்பட்ட பிறகே பாதையை திறக்கப்படும் என தெரிகிறது.
 
இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் பெரியசாமி கூறுகையில், ஏற்காட்டில் 40 அடி ரோடு, 60 அடி ரோடு பகுதி மற்றும் மலை உச்சியில் ஆங்காங்கே சிறிய அளவிலான புகை மட்டும் வருகிறது. இதனை அணைக்கும் முயற்சியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 99.9 சதவீத தீ அணைக்கப்பட்டு விட்டது.
 
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தண்ணீரை கொண்டு செல்ல முடியாது என்பதால் சிக்கல் நீடித்து வருகிறது. ஆங்காங்கே உள்ள பச்சை இலை கொடிகளை பறித்து, தீயை அடித்து அணைத்து வருகிறோம். காட்டுப்பகுதிக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்ல கூடாது என தொடர்ந்து கூறி வருகிறோம்’ என்றார்.