கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளநிலையில், மாணவியின் தந்தை விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மறுபிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இதில் உள்ளூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதித்த நிலையில், 17.7.2022 மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பள்ளி பேருந்துகளை தீ வைத்து கொளுத்தியதுடன், பள்ளி கட்டிங்களையும் சேதப்படுத்தினர்.
இதனையடுத்து அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல் பள்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 329 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மாணவியின் தந்தை ராமலிங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “தனது மகள் உயிரிழந்தது குறித்த தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு சென்றோம். மகள் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் சக மாணவிகளை பார்ப்பதற்காக சென்ற எங்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளது. உடலின் பல இடங்களில் காயங்கள் உள்ளன. முதலில் நடந்த பிரேதப் பரிசோதனையின்போது, உடன் இருக்க எங்களை அனுமதிக்கவில்லை. தனது மகளின் உடற்கூராய்வு தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது.
எனவே, உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியவும், சந்தேக மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரவும், மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும். மறுபிரேத பரிசோதனையின்போது எங்கள் தரப்பு மருத்துவரையும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதலின்படி பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்படவில்லை. எனவே, மறுபிரேதப் பரிசோதனைக்கும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று (18.7.2022) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? இந்த போராட்டத்தை நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு காரணம் என்ன, தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று எப்படிக் கூறுகிறீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதனையடுத்து மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்முறைக்கும், உயிரிழந்த பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, கனியாமூரில் வெடித்த வன்முறை திடீர் கோபத்தால் நடந்தது அல்ல; திட்டமிட்ட சம்பவம் போல உள்ளது. பள்ளியில் மாணவர்களின் டி.சி.யை எரிக்க யார் உரிமை தந்தது? வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், CB-CID மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்டோரை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மறுபிரேத பரிசோதனை மருத்துவ குழுவில் தடய அறிவியல் துறை முன்னாள் இயக்குனர் சாந்தகுமாரி தலைமையில் விழுப்புரம் டாக்டர் கீதாஞ்சலி, திருச்சி டாக்டர் ஜெயந்தி, சேலம் டாக்டர் கோகுலநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் தந்தை, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரையும் பிரேத பரிசோதனையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், மாணவியின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (19.07.2022) விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு கோரிக்கை உயர் நீதிமன்றத்தில் ஏற்கப்படாததால் மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.