தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக அவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவசாசன், மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தேசியக் கொடியை அவமதிக்கும் நோக்கில், பாஜக கட்சி வர்ணம் பூசப்பட்ட கம்பத்தில் எல்.முருகன் தேசியக் கொடி ஏற்றியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை முகப்பேரை சேர்ந்த கே.ஆர்.குகேஷ் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

புகாரில், “ஒவ்வொரு இந்திய குடிமகனும் உயிராக மதிக்கும் நம் நாட்டின் பெருமதிப்பிற்குரிய மூவர்ண தேசிய கொடியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கத்தில் பாஜக கொடியேற்றக்கூடிய காவி மற்றும் பச்சை வர்ணம் ஏற்றப்பட்ட கொடி கம்பத்தில், நம்முடைய பெரு மாண்பிற்கும், மரியாதைக்குமுரிய தேசிய மூவர்ண கொடியினை ஏற்றி, தேசியக் கொடியின் மாண்பைச் சிதைத்துள்ளனர்.

மேலும் மேற்கண்ட இத்தகு செயலினை பாஜகவின் மாநில தலைவரான எல்.முருகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அக்கட்சி கொடியையும், நாம் வணங்கும் தேசியக் கொடியையும் ஒருமித்ததாக தீய எண்ணத்துடன் காண்பித்தது மக்கள் மத்தியில் பரப்பி நம் தேசிய கொடியையும் நம் நாட்டின் மாண்பையும் அவமானப்படுத்தி சீர்குலைத்துள்ளார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், முன்னாள் அமைச்சர் இல.கணேசன் மற்றும் இச்செயல்களுக்கு உடந்தையாக இருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மீது தேசியக் கொடியை அவமதித்ததற்காக சட்டப்படி விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யவேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க: ஆர்டிஐ சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது பிரதமர் அலுவலகம்.. முன்னாள் முதல் தலைமை தகவல் ஆணையர்