திருவாடானை தொகுதி அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜக வின் தேசிய செயளாலர் எச் ராஜாவை போலவே பொது வெளியில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எச் ராஜாவை போலவே சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். இதில் 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீசார் கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் கருணாஸை கைது செய்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், என் மீதான வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்க இருக்கிறேன். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என்னை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றார்களா என தெரியவில்லை எனக் கூறினார்.
இதையடுத்து சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கைதான எம்.எல்.ஏ. கருணாஸ் எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் கைதாகிய செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய கட்சி நிர்வாகிகளும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்ற கோரிக்கையை பரிசிலித்த நீதிபதி.,
எம்எல்ஏ கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி பிரிவை (307) மட்டும் ரத்து செய்தார். மேலும் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த நிர்வாகி செல்வநாயகம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனிடையே எம்எல்ஏ கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எம்எல்ஏ கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பல வேறு சமூக வலை தளங்களில் பாஜக ராஜாவுக்கு அதரவாக மட்டும் தமிழக போலிசார் மற்றும் அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர் ..
இந்நிலையில் கருணாஸ் கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? கருணாஸ் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை வேண்டுமென்ற கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டம், “ஆளுக்கொரு நீதி – வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில்தான் அமல்படுத்தப்படுகிறது. கைது செய்ய வேண்டியவர்களின் பின்னணி பற்றி கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும். விடுக்க வேண்டியவர்களை உடனேயே விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். தமிழக அரசு நடுநிலையாக இருக்கவேண்டும். தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்