கனடாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் நடத்தப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்தார். பிரதமர் ட்ரூடோவின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்குள் முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க முடிவு செய்தார்.

கனடாவில் மொத்தம் 338 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 170 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்நிலையில் நேற்று 338 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

அதில் ஆளும் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோவும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல்லும் களமிறக்கப்பட்டனர். வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலையும், பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளதை அடுத்து, லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3வது முறையாக பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மற்ற கட்சிகளான ஜனநாயகக் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிளாக் குயிபிக்கோயிஸ் ஆகிய கட்சிகளைவிட அதிக இடங்களை லிபரல் கட்சி பிடித்து வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைப்பதற்காக 170 இடங்களைப் பிடிக்குமா என்பதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை.

இதனிடையே குயிபெக் மாகாணத்தில் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் மக்கள் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள செய்தியில்,

“லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்து, ஒளிமயமான எதிர்காலத்தைத் தேர்வு செய்து வாக்குகளைப் பதிவு செய்த கனடா மக்களுக்கு நன்றி. கொரோனா தொற்றை நாங்கள் தான் அழிக்கப் போகிறோம், கனடாவை நாங்கள் தான் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களவைத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் ஆளும் லிபரல் கட்சி சார்பில் 17 பேரும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் 13 பேரும், புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் 10 பேரும், கனடா மக்கள் கட்சி சார்பில் 5 பேரும் போட்டியிடுகின்றனர்.

தற்போது கனடா நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 பேர் எம்.பி.யாக உள்ளனர். இந்த முறைத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எத்தனை பேர் எம்.பி.யாவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.