கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் ‘தேவ்’ என்ற கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
மேலும் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குலுமணாலியில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து, வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாமல் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. படக்குழுவினர் சுமார் 140 பேர் சாப்பிட உணவு கூட கிடைக்காமல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். .
இதுபற்றி நடிகர் கார்த்தி கூறும் போது, “குலுமணாலியில் அழகிய மலை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டு, கார் மற்றும் பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. சிறிய பாறைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. காரில் நாங்கள் படப்பிடிப்பிற்கு செல்ல முடியாமல் தடங்கல் ஏற்பட்டது. காரிலேயே நான் நான்கு மணி நேரம் அமர்ந்து இருந்தேன். நான் தற்போது அருகில் உள்ள கிராமத்தில் தங்கியுள்ளேன்.
படக்குழுவினர் அனைவரும் கீழே இறங்க முடியாமல் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். கடந்த 23 ஆண்டுகளுக்குப் பின்னர் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால், சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலை சரி செய்ய எப்படியும் 28 மணி நேரத்திற்கும் அதிகமாகும். அதன்பின்னர் தான் படக்குழுவினர் இறங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பால் தயாரிப்பாளருக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.