ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையைத் தமிழக அரசே திரும்பப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக்கூடிய வகையில் மாற்றங்களைச் செய்து சமீபத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு ஊர்ப் பெயர்கள் தவறான உச்சரிப்போடு இடம்பெற்றிருந்தன.
உதாரணமாக, ‘வேலூர்’ ஆங்கிலத்தில் Veeloor என மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஊர்ப் பெயர்களின் தவறான உச்சரிப்பு கொண்ட பெயர் மாற்றம் குழப்பங்களை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஊர்ப்பெயரை மாற்றும் அரசாணை தேவையா என்றும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
மேலும் வாசிக்க: தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிப்பா… குழப்பத்தில் மக்கள்
மேலும், தமிழில் உள்ள ஊர் பெயர்களே இன்னும் சரியான முறையில் பயன்படுத்தப்படாத நிலையில் ஆங்கிலத்தில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், தற்போது தமிழக ஊர்ப் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்க மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலிலேயே வல்லுநர்களிடம் கருத்துக் கேட்காமல் அவசர அவசரமாக அரசாணையை வெளியிட்டு இப்போது திரும்பப் பெறுவது ஏன் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை போதாமைகளை மறைக்க மக்களை திசைதிருப்புவதா எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.