ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் “எல்.கே.ஜி”. படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரபு இயக்கத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாக உள்ள படம் எல்.கே.ஜி. தற்போதைய அரசியலை கிண்டல் செய்து உருவாகும் இப்படத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், லியோன் ஜேம்ஸ் இசையில் முதல் பாடல் குடியரசு தினத்தன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், #TharamanaSambavam1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி நேற்று வெளியிட்ட போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்ததால் அதிமுக.வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார் டுவிட்டரில், “படம் ரீலீஸ் அகட்டும் உன் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பன்னிடுரேன்” என பதிவிட்டிருந்தார். அதிமுக நிர்வாகியின் டுவீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி, “இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டவா பண்ணி நம்ம மாஸ் காமிங்க…!” என்று பதில் அளித்தார்.

இதற்கிடையே சிம்பு ரசிகர்கள், ஆர்.ஜே.பாலாஜி அதிமுக நிர்வாகியை கலாய்ப்பதாக இருந்தால் அவரை மட்டும் கிண்டல் செய்யுங்கள். தேவையில்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சிலர், விஜய்க்கு பாஜக போல, நம்ப பாலாஜிக்கு அதிமுக இலவசமா விளம்பரம் செய்யும் போல. வெட்டிங் அடுத்து எந்த எந்த கச்சி எல்லாம் இலவச மார்க்கெட்டிங் பன்னி படத்த ஓட விட்டு அண்ணன் பாலாஜிய சூப்பர் ஸ்டார் ஆக்க போறாங்க., என்றும் அரசியல் காட்சிகளை விமர்சித்துவருகின்றனர்.