கடந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடையில் 50 சதவீதம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை’’ என தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. முக்கியமாக பாஜவிற்கு மட்டும் ரூ.553.38 கோடி ஆதாரமற்ற நிதி கிடைத்துள்ளது. இது ஆதாரமில்லாமல் 6 தேசிய கட்சிகளுக்கு கிடைத்த மொத்த தொகையில் 80 சதவீதமாகும்.
 
தேசிய கட்சிகள், அதன் வேட்பாளர்கள் தேர்தலின்போது எவ்வளவு பணம் செலவிடுகின்றனர் என்பது குறித்து அறிய எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருந்தது. இதனால் அவர்கள் தேர்தலுக்காக வரம்பு மீறி கோடிக் கணக்கில் பணத்தை செலவு செய்தனர்.
 
தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளும் தேர்தலுக்காக கட்சிகள் செலவு செய்த தொகையை தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இதைத் தடுக்கும் வகையில்,
 
சட்டப்பேரவை தேர்தலுக்கு 10 லட்சம் ரூபாயும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 25 லட்சம் ரூபாயும் மட்டுமே கட்சிகள், வேட்பாளர்கள் செலவு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் கடந்த 2009ம் ஆண்டு நிதி வரம்பை நிர்ணயித்தது.
 
அதன் பின்னர் மக்களவைத் தேர்தலுக்காக செலவு செய்யும் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது பெரிய மாநிலங்களில் ரூ.40 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரையிலும் சிறிய மாநிலங்களில் ரூ.22 லட்சம் முதல் ரூ.54 லட்சம் வரையிலும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மக்களவைக்கு வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தல் நடைபெற இருப்பதால், தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன.
 
இதற்கிடையே, 6 முக்கிய தேசியக் கட்சிகளுக்கு கடந்த நிதியாண்டில் கிடைத்த நிதி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதற்கான ஆய்வறிக்கையை நேற்று அது வெளியிட்டது.
 
அதில், “கடந்த 2017-18ம் நிதியாண்டில் காங்கிரஸ், பாஜ, இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 6 முக்கிய கட்சிகளுக்கு மொத்தமாக ரூ.1,293.05 கோடி நிதி கிடைத்துள்ளது. இதில் ரூ.689.44 கோடி, அதாவது 53 சதவீதம் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரம் இல்லை.
 
இதில் பாஜவிற்கு மட்டும் ரூ.553.38 கோடி ஆதாரமற்ற நிதி (கறுப்பு பணம்) கிடைத்துள்ளது. இது ஆதாரமில்லாமல் 6 தேசிய கட்சிகளுக்கு கிடைத்த மொத்த தொகையில் 80 சதவீதமாகும்.
 
பணமதிப்பிழப்பு கொண்டு வரும் போது கறுப்பு பணத்தை ஒழிப்போம் என மோடி சொன்னார் மேலும்  டிஜிட்டல் இந்தியா , ஸ்வாட்ச் இந்தியா என்று ழுழங்கும் பாஜக ஆதாரமற்ற நிதியை (கறுப்பு பணம்)  மிக அதிகமாக கொண்டுள்ளது ஆச்சிரியத்தை பல தருவதாக சமூகதளத்திலே கருத்துகளை வைத்துள்ளனர் 
 
இது தவிர, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.215 கோடியும், ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதியாக ரூ.354.22 கோடியும் தேசிய கட்சிகளுக்கு கிடைத்துள்ளது. பிற வகையில் கிடைத்த நிதி ரூ.4.5 கோடி” என கூறப்பட்டுள்ளது.
 
மேலும், “தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், தேசியக் கட்சிகளுக்கு ரூ.467.13 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.
 
உறுப்பினர் சேர்க்கை, வங்கி வட்டி, சொத்துகள் விற்பனை, புத்தக வெளியீடுகள் மூலம் கட்சிகள் ரூ.136.48 வருவாய் ஈட்டியுள்ளன.
 
ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக வழங்கப்பட்ட நன்கொடையின் கீழ் ரூ.16.80 லட்சமும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியக் கட்சியாக இருந்த போதிலும், கடந்த நிதியாண்டு அறிக்கை சமர்ப்பிக்காததால், அக்கட்சி ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போதைய நிலவரத்தின்படி, ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக நிதி அளிக்கும் நன்கொடையாளர்கள், தேர்தல் பத்திரங்கள் மூலம் ஈட்டப்படும் நிதி ஆகியவை குறித்து அரசியல் கட்சிகள் விவரம் தெரிவிக்க தேவையில்லை.
 
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் முதல் தேசியக் கட்சிகள் மத்திய தகவல் ஆணையத்தின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தகவல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை உடன்படவில்லை என்பது தான் அப்பட்டமான உண்மை .