திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (29.09.2021) பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மீது புகார் மனு அளித்துள்ளார்.
தமிழில் திரௌபதி என்ற படத்தை இயக்கிய டைரக்டர் ஜி.மோகன் அடுத்ததாக நடிகர் ரிஷி ரிச்சர்ட், இயக்குநர் கௌதம் மேனன், தர்ஷா குப்தா, ராதாரவி ஆகியோர் நடிப்பில் ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. திரௌவுபதி படம் போலவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் சிறப்புக் காட்சி அரசியல் கட்சிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது. இந்த திரைப்படத்தை தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பார்த்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எச்.ராஜா, ஊடகவியலாளர்களை மிகவும் தரம் தாழ்த்தி Presstitute – ஊடக வேசிகள் அவதூறு வார்த்தைகளால் விமர்சித்தார்.
தொடர்ந்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த எச்.ராஜா, ஆரியம் பற்றி பேசும் சுப.வீரபாண்டியன் மூளை குப்பைத்தொட்டி ஆகிவிட்டது. சுப வீரபாண்டியனே அறிவாலயம் வாசலில் நிற்கும் பிச்சைக்காரன் என்று அநாகரிகமான வார்த்தைகளால் விமர்சித்தார்.
எச்.ராஜாவின் இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எச்.ராஜா மீது புகார் மனு அளித்துள்ளார்.
அதில், “பத்திரிகையாளர்கள் பற்றியும், என்னை பற்றியும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.