கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி பிரகாஷ் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய விவரம் வருமாறு“அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தவிடாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வாக்குறுதி அளித்து இருப்பதாக வரும் பத்திரிகை செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
 
18 சட்டமன்ற தொகுதிகள் காலியாகி, ஏறக்குறைய 15 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இப்போது வருகின்ற மக்களவைத் தேர்தலுடனும் அதற்கு இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என்று மத்திய பா.ஜ.க அரசு திரைமறைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், அரசியல் சட்டத்தின்படி அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி மிகவும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
வருமான வரித்துறையும், சி.பி.ஐ.யும் இதுவரை அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும், முதல்-அமைச்சருக்கு வேண்டிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மீதும் நடத்திய சோதனைகள் அத்தனையும் ‘தேர்தல் ஆதாயம்’ என்ற ஒரே காரணத்திற்காக, முற்றிலும் மூட்டை கட்டி மூலையிலே கிடத்தப்பட்டுள்ளது.
 
அந்த ஊழல் வழக்குகளையும், வருமான வரித்துறை விசாரணைகளையும் காட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒவ்வொரு நாளும் மிரட்டி, பொருந்தாத் தேர்தல் கூட்டணிக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கிற பா.ஜ.க அரசு, 60 முதல் 70 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல் தவிப்பதைக் கண்டுகொள்ளத் தயாராகவே இல்லை.
 
21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால், தன் ஆட்சி நிச்சயமாகப் பறிபோய்விடும் என்ற பயத்தில் உழன்று கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி வைத்த “இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்” என்ற மக்கள் விரோதக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசு நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே வேட்டு வைக்கும் பயங்கரமாகும்.
 
மத்திய பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டுவிடாமல், தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அரசியல் சட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்தி, ஜனநாயக மானை சர்வாதிகார வேங்கையிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும் ஓட்டுமொத்த தமிழகத்துக்கும் சேர்த்து தேர்தல் வர வேண்டும் என நாங்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தி.மு.க. ஆட்சி உதயமாக வேண்டும் என்கிற உணர்வோடு இருக்கிறார்கள். அந்த உணர்வினை நிறைவேற்ற அனைவரும் தயாராகுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.