உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வெற்றிக் கொண்ட சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர்.

எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12-வது இடத்தில் உள்ளார். இந்தத் தொடரில் இன்னும் 7 சுற்றுகள் உள்ளன.

இந்நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், “என்ன ஒர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கறுப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது ​​மாயாஜாலம். மேன்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரக்ஞானந்தா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த, தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.