உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
டிஎன்எஸ் உள்ளிட்ட முக்கிய சர்வர்களின் பராமரிப்பு பணி காரணமாக, இணைய பயனாளர்கள் அடுத்த 48 மணிநேரத்தில் இணைப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
தி இன்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என்று அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அடுத்த 48 மணிநேரத்துக்கு பல இணையதள சர்வர்களும் தொடர்பு இழக்கக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. சமீபகாலமாக இணையதளங்களில் புகுந்து மர்ப நபர்கள் இணையதளங்களை முடக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பராமரிப்பின்போது, இணையதள முடக்கம் செய்வதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் வேலைகளில் ஐசிஏஎன்என் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் இணையதள சேவை முடங்குவதுடன், குறிப்பிட்ட இணையதள பக்கங்களை பார்க்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.
ஐஎஸ்பி எனப்படும் இணைய இணைப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தால் இத்தகைய இடையூறுகளை தவிர்க்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.