ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதால், அதில் பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் பயணிகள் விவரங்கள் சேர்த்து வைக்கும் இனையதளத்தை கடந்த பிப்ரவரி மாதம் ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இந்த சைபர் பாதுகாப்பு தாக்குதலில் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏர்இந்தியா இணையதளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 2011 ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 3 ஆம் தேதி வரை பத்து வருடம் பயணம் செய்த 45 லட்சம் பயணிகளின் தரவுகள் கசிந்துள்ளது.

பயனர்களின் பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல், பாஸ்போர்ட் தகவல், டிக்கெட் தகவல், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவில் அடிக்கடி பயணிக்கும் பயணியர் தகவல்கள், அத்துடன் கிரெடிட் கார்டுகளின் விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு தரவு திருடப்பட்டதாக நிறுவனம் கூறியிருந்தாலும், சிவிவி அல்லது சிவிசி எண்கள் திருடப்படவில்லை என்று ஏர் இந்தியா கூறியுள்ளது. இருப்பினும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களை இ-மெயில் மூலம் ஏர் இந்தியா அனுப்பியுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. பயணிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எங்களுக்கு மிக முக்கியமானது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட் ஆல் ஆய்வகத்தின் கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து: தமிழக சுகாதாரத்துறை