அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நெடுஞ்சாலையில் ஒப்பந்த பணிகளில் முதல்வர் ஊழல் செய்துள்ளதாக இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல்வேறு நெடுஞ்சாலையில் பணிகளில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3120 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக ஆர்.எஸ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மீது வழக்குப்பதிய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் ஆணையிட கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இதுகுறித்து முதல்வர் பழனிசாமி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர், கண்காணிப்பு கமிஷனர் மற்றும் நிர்வாக சீர்திருத்த கமிஷனர் ஆகியோரிடமும் தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.
உலக வங்கி நிதியுதவியுடன் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு 713.34 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்ட மதிப்பீடு 1,515 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் நெடுஞ்சாலைத்துறையை கைவசம் வைத்துள்ள முதல்வர் பழனிசாமி தன் மருமகள் திவ்யாவின் உறவினருக்கு கொடுத்துள்ளார்.
நெல்லை- செங்கோட்டை- கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு 179.94 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த பணியை பழனிசாமி தனது மகன் மிதுன் குமாரின் மாமனாருக்கு கொடுத்துள்ளார்.