சட்ட கட்டமைப்புகள் மேற்கொள்ளாமல் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது.

ஆனால் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்றால், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் பிரச்சினை தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது. அதன்படி கட்சிகள் தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைத்தன. இந்த பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சிகளுடனும் 2 நாட்கள் ஆலோசனை அண்மையில் நடைபெற்றது.

இந்த நிலையில், சட்ட பணிகள் மேற்கொள்ளாமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமே இல்லாதது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் கூறுகையில், சட்ட கட்டமைப்பு செய்யாமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.