சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரின் சிறை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் அளித்த புகாரில், மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காக காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி காலை 6.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுகொலை குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்பவரை கைது செய்தனர்.
கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ராம்குமாரின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்து விவாதத்திற்கு உள்ளாகின.
ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் வெளிவர நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வலியுறுத்தினர். மேலும் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிறைத்துறையினருக்கு மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
அதன்படி, அப்போதைய புழல் ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன் ராம்ராஜ் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி அவர்களது விளக்கத்தை பதிவு செய்தது.
இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணை நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று (ஆகஸ்ட் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே விளக்கம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்தது.
அத்துடன், தடயவியல் துறை மருத்துவர்களான வேணு ஆனந்த் மற்றும் ஆண்டாள் ஆகியோரும் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து, ஆஜரான சிறைத்துறையினர் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், ராம்குமார் மரணத்தில் தொடர்புடைய நபர்களுக்கு உரிய முறையில் தண்டனை வழங்க வேண்டும். ராம்குமார் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த தடயமும் இல்லை என இன்று ஆஜராகிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடநாடு வழக்கு மறுவிசாரணை: பதற்றத்தில் போராட்டத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி!