சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்த கல்லூரி அரியர் மாணவர்களின் தேர்ச்சி வழக்கு விசாரணை யூடியூப் சேனலில் ஒளிபரப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. கொரோனா பரவல் அச்சுறுத்தலை அடுத்து, உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுகிறது.
கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் கலந்து கொண்டு விசாரணையை கண்டதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, விசாரணையில் இடையூறு ஏற்பட்டது. இதனால் நீதிபதிகள் வழக்கை விசாரிக்க மறுத்து, விசாரணை லிங்கில் இருந்து அனைத்து மாணவர்களும் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (டிசம்பர் 01) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களில் சிலர் இன்றைய வழக்கு விசாரணையை யூடியூப் சேனலில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்துள்ளனர். நீதிமன்ற விசாரணை சமூக வலைதளத்தில் நேரடி காட்சியாக ஒளிபரப்பானது, நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைகளை சிலர் சட்ட விரோதமாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
யூடியூப்பை வெளியிட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரியர் தேர்வு வழக்கு விசாரணை காணொலி அல்லாமல் நேரடி விசாரணையாக நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.