உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றதற்கு எதிராக 35 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தராகண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பாஜக வெற்றி பெற்றதும் முதல்வராக பதவியேற்றவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது தலைமையிலான ஆட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு, பாஜகவில் உட்கட்சி பூசலாகவும் வெடித்தது.
இதனையடுத்து 4 மாதங்களுக்கு முன்னர் திரிவேந்திர சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் மக்களவை எம்பியான தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். இவர் பதவியேற்று 6 மாதத்திற்குள் அதாவது வரும் செப்டம்பருக்குள் எம்எல்ஏவாக தேர்வாக வேண்டும்.
இந்நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் காரணம் மற்றும் உட்கட்சி பூசல்களால் முதல்வராக இருந்த தீரத் சிங் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், தீரத் சிங் ராவத் தனது பதவியில் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில் டேராடூனில் பாஜகவின் ஒன்றிய பார்வையாளர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் 3-7-3021 மாலை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எம்எல்ஏ புஷ்கர் சிங் தாமி உத்தராகண்ட் மாநில புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து உத்தராகண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியா, புதிய முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உத்தரகாண்ட் மாநிலத்தின் 11வது முதல்வரான புஷ்கர் சிங் தாமி (45 வயது), மாநிலத்தின் மிக இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் 4 மாதங்களுக்குள் மீண்டும் ஒரு புதிய முதல்வர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[su_image_carousel source=”media: 24881,24882″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]
உத்தராகண்ட் மாநில புதிய முதல்வரான புஷ்கர் சிங் தாமி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். இவர் 2002-2008 ஆம் ஆண்டு பாஜக இளைஞர் அமைப்பின் மாநில தலைவராகவும் பதவி வகித்தார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் நீண்டகாலம் செயல்பட்டவர் என்பதாலேயே புஷ்கர் சிங் தாமி, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புஷ்கர் சிங் தாமியை முதல்வராக தேர்வு செய்ததற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் 35 எம்எல்ஏக்கள், புதிய முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் புஷ்கர் சிங் தாமி, அகண்ட பாரதம் வரைபடத்துடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது சர்ச்சையாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அந்த பதிவில், ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இடம்பெறவில்லை.
அதேநேரத்தில் இலங்கை, வங்கதேசம் என பல நாடுகளும் இந்த அகண்டபாரதம் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. இப்போது இந்த பழைய ட்வீட்டை குறிப்பிட்டு, இப்படியானவரையா உத்தரகாண்ட் முதல்வராக பாஜக தேர்ந்தெடுத்துள்ளது என பாஜகவினரே கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் போர் விமான ஊழல் விசாரணை தொடங்கிய பிரான்ஸ்; கலக்கத்தில் மோடி அரசு