பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் லுவாங்கோ உள்ளிட்ட 5 பேர் 2 கிலோ அபின் கடத்தியதற்காக திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாகக் குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மன்னார்புரம் பகுதியில் நேற்றிரவு வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, காரில் அபின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, காரில் வந்த திருச்சியைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பெரம்பலூரைச் சேர்ந்த சித்தா மருத்துவர் மோகன்பாபு, பாஜக பிரமுகர் லுவாங்கோ பி.அடைக்கலராஜ் உள்பட நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

காரில் பிடிபட்ட 2 கிலோ அபின் போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் என்றும் இது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள லுவாங்கோ பி.அடைக்கலராஜ், முன்னாள் பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளார். தற்போது பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு சம்பவமாக பொள்ளாச்சியில் லாரியில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது அறியாமல் 10 டன் தேங்காய் கொண்ட லாரியை கடத்திய பொள்ளாச்சி நகர பாஜக செயலாளர் மணிகண்டன், கோகுல் உட்பட6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க: எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அரசு நிறைவேற்றும்… அதிமுக அமைச்சர்