‘வாடி புள்ள வாடி’, ‘டக்கரு டக்கரு’ இவற்றின் வரிசையில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில், ஆனந்த் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘மாணவன்’.
இளைஞர்கள் எப்பொழுது மண்ணுக்காகவும், சமூகத்துக்காகவும் போராட வீதிக்கு வந்தார்களோ, அப்பொழுதே சமூக மாற்றத்துக்கான விதை விழுந்துவிட்டது. உரிமையை மீட்கக் குரல் கொடுத்த போராளிகளே, அதிகாரிகளாக மாறினால் அதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். புரட்சி என்பது வீதியில் இல்லை மாணவர்கள், இளைஞர்களின் முனைப்பில் இருக்கிறது’ என்ற கருத்தை வலியுறுத்துகிறது `மாணவன்’ ஆல்பம்.
இதன் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. யூ-டியூப் பிரபலங்களான ஆர்.ஜே விக்னேஷ், மதன் கௌரி, ‘எருமசாணி’ விஜய் மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
இளைஞர் பட்டாளத்தின் ஆரவாரத்துக்கு மத்தியில் பேசிய ஹிப் ஹாப் தமிழா ஆதி, “தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளிலிருந்து 90 மாணவர்களின் உழைப்பில் உருவானதுதான் இந்த ‘மாணவன்’. ரிசர்ச், டெக்னிக்கல் டீம், கோ-ஆர்டினேஷன் இப்படிப் பல வழிகளில் மாணவர்கள் வேலை செஞ்சு இந்த மாணவனை எடுத்திருக்காங்க.
நட்பையும் தாண்டி இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கணுங்கிற எண்ணத்தில் வருகை தந்திருக்கும் அன்பு நண்பன் விக்னேஷ், யூ-டியூப் பிரபலங்களான மதன் கௌரி, விஜய், ‘மீசைய முருக்கு’ டீமுக்கு நன்றி. அத்தனைக்கும் மேல நான் இசையமைச்சாலும், நடிச்சாலும், இயக்கினாலும் ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.
மேலும் : ‘மாணவன்’