இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது.
ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 104 ரன்கள் குவித்தார்.
அபாரமாக ஆடிய தோனி, 2 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 55 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
தினேஷ் கார்த்திக் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உடனிருந்தார். ரோஹித் 43, தவன் 32, ராயுடு 24 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலைப் பெற்றது.