தற்போதை மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. எனவே, அதற்கு முன்பாக மக்களவை தேர்தலை, தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும்.
 
இதனால் மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2004ம் ஆண்டு நான்கு கட்டமாக மக்களவை தேர்தலை பிப்ரவரி 29ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி, மே 10ம் தேதி முடிந்தது.
 
கடந்த 2009ம் ஆண்டில் 5 கட்ட மக்களவை தேர்தலை, மார்ச் 2ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி முடிந்தது.
 
கடந்த 2014ம் ஆண்டில் மக்களவை தேர்தல் தேதி மார்ச் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. 9 கட்டங்களாக நடந்த தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி முடிந்தது.
 
அதேபோல், வரும் மக்களவை தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என முக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எத்தனை கட்டமாக இந்த தேர்தலை நடத்தலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
 
தேர்தல் பணிக்கு வரும் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் இதர தேவைகளை கணக்கிட்டு எத்தனை கட்டமாக மக்களவை தேர்தலை நடத்துவது என்பது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
 
மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.
 
சிக்கிம் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 27ம் தேதியுடனும், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரேதேச சட்டப்பேரவைகளின் பதவிக்கலாம் முறையே ஜூன் 18, ஜூன் 11, ஜூன் 1ம் தேதியும் முடிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கடந்தாண்டு நவம்பர் மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதன் காலவரையும் மே மாதத்துடன் முடிகிறது.
 
எனவே, மக்களவை தேர்தலுடன், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு, காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் முன்கூட்டியே நடத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என கூறப்படுகிறது.
 
மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 21 தமிழகத்தின் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாக அதிமுக வட்டார செய்திகள் தெரிவித்தன