பாஜக தலைவர்களின் முகமது நபிகள் பற்றிய வெறுப்பு பேச்சுக்கு சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எனக் கூறியுள்ளது பிரதமர் மோடிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துக்கள் மற்றும் மதவெறி வெறுப்பு பேச்சுக்களை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை பேசி வந்த நிலையில், தற்போது பாஜக தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு பேச்சு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், இஸ்லாமிய மதத்தை பற்றியும், முகமது நபியை பற்றியும் எதிர் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், நவீன் ஜிந்தால் என்ற பாஜக நிர்வாகியும், நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பாஜகவினரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்எஸ்எஸ், இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த வன்முறையாளர்கள் கலவரத்தை தூண்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி கத்தார், ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளில் இருந்தும் ஒன்றிய மோடி அரசிற்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்தன. இதனால் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபூர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு சர்வதேச அளவில் எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து, பாஜக கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எந்தவொரு பிரிவினரையும் அல்லது மதத்தையும் அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தையும் பாஜக கடுமையாக எதிர்க்கிறது.

இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து வளர்ந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் அவமதிப்பதை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாஜகவினர் முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசியதை கண்டித்து சவுதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அங்கு பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி மூலம் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சர்வதேச தலைவர்கள் பலரும், அவதூறு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மோடி அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இந்திய பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர். இதனையடுத்து ட்விட்டரில் #boyCottIndia என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாகி உள்ளது. மேலும் ‘இந்திய பொருட்களை மக்கள் வாங்கவேண்டாம்’ என பிரச்சாரம் செய்து, ‘இந்திய பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள்’ என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.

இது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக நடவடிக்கையால் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.