இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து உள்ளனர்.

பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா உள்ளது. இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங்கள் அதிகம்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று (ஜனவரி 15) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள மமுஜூ மாவட்டத்தின் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மமுஜூ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதனால் நோயாளிகள், ஊழியர்களில் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் பலரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

[su_image_carousel source=”media: 21497,21495,21496″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் நிலநடுக்கத்தில் 600க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் இந்தேனேசிய தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வாரம் இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், புறப்பட்ட 4 நிமிடத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து நீரில் மூழ்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் ஜலசமாதியாகினர்.

அதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டில் சுலவேசி தீவுகளில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், அப்போது சுனாமி பேரலைகள் எழுந்து மொத்தம் 4,300 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீர் மாயம்