யோகி ஆதித்யநாத் அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு (2022) சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒன்றிய பாஜக அரசு, பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக உத்தரப் பிரதேச மாநில தலைமை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளவரான அனூப் சந்திர பாண்டே (வயது 61), 1985 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்று 37 வருடங்கள் உத்தரப் பிரதேச ஆட்சி பணிகளில் பல முக்கிய துறைகளில் பணிபுரிந்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் ரூ.613 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட மிக முக்கியமான பசு பாதுகாப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியவர் அனூப் சந்திர பாண்டே.
இதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசால் உத்தரப் பிரதேச மாநில தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றார் அனூப்.
இந்நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையராக பதவியில் நீடிப்பார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச மாநில தேர்தலை முன்வைத்தே அனூப் சந்திர பாண்டேவை தேர்தல் ஆணையராக பாஜக மோடி அரசு நியமித்திருப்பதாக அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாடியை வளர்த்தது போதும்; நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுங்க: பிரதமருக்கு டீ கடைக்காரர் கடிதம்