தயாரிப்பாளர்கள் சங்க பூட்டை உடைக்க முயன்றதாக நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் கைதாகியுள்ளார்கள்.
 
விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.
 
பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். பிரச்னைகள் தொடர்பாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்று போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
 
மேலும் கடந்த நிர்வாகம் சேமித்து வைத்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்றும் இவர்கள் கேள்வியெழுப்பினார்கள். மேலும் விஷால் குறித்து முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள்.
 
விஷால் பதவி விலகக் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விஷால் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
 
இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போட்ட பூட்டை உடைக்க விஷால் இன்று வந்தார். ஆனால் பூட்டை உடைக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள்.
 
பதிவுத்துறையினர் வந்து பூட்டைத் திறப்பார்கள் என்று காவலர்கள் விஷாலிடம் தகவல் தெரிவித்தார்கள். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் விஷால்.
 
எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க அனுமதி மறுத்ததால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் மற்றும் அவருடைய ஆதரவு தயாரிப்பாளர்கள் பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
நடிகர் விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சி.ஆர்.பி.சி. 145, 151 ஆகிய 2 பிரிவுகளில் விஷால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சொத்து விவகாரத்தில் அமைதியை குலைக்க முயற்சித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இன்று காலை கைது செய்யப்பட்ட விஷால் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு  பின்னர் மாலை விடுவிக்கப்பட்டார்